சாய்ந்தமருது பொது நூலகத்தில் கோலாகலமாக நடைபெற்ற சிறுவர் தின மற்றும் வாசிப்பு மாத ஆரம்ப விழா

 சாய்ந்தமருது பொது நூலகத்தில் கோலாகலமாக நடைபெற்ற சிறுவர் தின மற்றும் வாசிப்பு மாத ஆரம்ப விழா

தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டும், ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாகவும் விசேட சிறுவர் தினக் கொண்டாட்ட நிகழ்வொன்று நேற்று (ஒக்டோபர் 01) சாய்ந்தமருது பொது நூலகத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.


"திடமான உள்ளங்கள்- வளமான சிறுவர்கள்" 

(Strong Minds - Enriched Children) எனும் உன்னத மகுட வாசகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் அவர்களின் தலைமையில் இனிதே ஆரம்பமானது. கல்முனை மாநகர சபை ஆணையாளர் திரு. என்.எம். நெளபீஸ் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக Dr. எம்.எம். ஜுமானா ஹசீம் அவர்களும், கௌரவ அதிதியாக நூலக வாசகர் வட்டச் செயலாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல். அன்சார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அத்துடன் மல்ஹருஷ் ஷம்ஸ் முன்பள்ளிச் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய வைத்தியர் எம்.எம். ஜுமானா ஹசீம் அவர்கள், "திடமான உள்ளங்கள்- வளமான சிறுவர்கள்" எனும் தொனிப்பொருள் குறித்து மிக ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். 

"நவீன டிஜிட்டல் உலகில் சிறுவர்களின் மனங்களை நல்வழிப்படுத்தவும், ஆரோக்கியமான ஆளுமை மிக்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும்,  சிறுவயதிலேயே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமே அறிவுத்திறன் மிக்க, ஆக்கபூர்வமான சிந்தனையுள்ள எதிர்காலச் சந்ததியை உருவாக்க முடியும்" என அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.


வாசிப்பு மாத தொடக்கத்தை முன்னிட்டு சிறுவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் மற்றும் கலைத் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் பலதரப்பட்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகள் அரங்கேறின. குறிப்பாக,  சுவராசியமான கதைசொல்லல் அமர்வு, சிறுவர்களின் கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் வர்ணங்கள் தீட்டும் சித்திரப் போட்டி மற்றும் வாசிப்பு ஊக்குவிப்புச் செயல்பாடுகள் என்பன நடைபெற்றன. அத்தோடு, முன்பள்ளிச் சிறுவர்களின் மழலைகளோடு கூடிய கலைத்திறன் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் அரங்கேறி பார்வையாளர்களைக் பெரிதும் கவர்ந்தன.


நிகழ்வின் இறுதியாக, கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்திய மழலைச் செல்வங்கள் அனைவரும் இனிப்புகள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்விற்கான முழுமையான பரிசில் அநுசரணையை மெற்றோபொலிட்டன் கல்லூரியின் கிழக்கு வளாகமும் (Metropolitan College Eastern Campus), இதற்கான ஊடகப் பங்களிப்பினை  'Lacsdo Media' நிறுவனமும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






























Popular posts from this blog

கிழக்கு மாகாண நூலகர் சேவைச் சங்கத்தின் ஆரம்பக் கூட்டம்

Meet the Authors programme at Public Library - Sainthamaruthu.

Online Examination for Grade 01 and 02